'டபுள்' என்ஜின்.. 'டப்பா' என்ஜின்.. 'டாப்' என்ஜின்: தேர்தல் நேர அரசியல் பேச்சு ஓட்டாக மாறுமா?

அரசியல்வாதிகளுக்கு மக்களே ஓட்டு மூலம் மதிப்பெண்களை வழங்குகிறார்கள்.
'டபுள்' என்ஜின்.. 'டப்பா' என்ஜின்.. 'டாப்' என்ஜின்: தேர்தல் நேர அரசியல் பேச்சு ஓட்டாக மாறுமா?
Published on

சென்னை,

தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல்வாதிகளுக்கு இடையே நடத்தப்படும் பரீட்சை. எப்படி, பாடப்புத்தகங்களை படித்த மாணவர்கள் இடையே தேர்வு நடத்தி ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குகிறார்களோ, அதுபோல மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதிகள் யார்? என்பதை அடையாளம் காண, தேர்தலில் களம் காணச் செய்து, மக்களே ஓட்டு மூலம் மதிப்பெண்களை வழங்குகிறார்கள்.

அதிக மதிப்பெண், அதாவது அதிக அளவில் ஓட்டு வாங்கியவர்களே வெற்றி பெறுகிறார்கள். இப்போது, தமிழ்நாட்டில் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் (எதிர்க்கட்சி) தயாராகிவிட்டன.

தேர்தல் நேர அரசியல்

'தினம் ஒரு திட்டம்' என்ற அடிப்படையில் ஆளுங்கட்சி ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களை தொடங்கிவைத்து மக்கள் மனங்களில் இடம்பிடிக்க பார்க்கிறது. மற்றொரு புறம், மக்களுக்கான பிரச்சினைகள் என்னென்ன? என்பதை எதிர்க்கட்சிகள் கண்டறிந்து, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்து மக்களுடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறது. இதுதான் தேர்தல் நேர அரசியல்.

இந்த நேரத்தில் அரசியல் மேடைப் பேச்சுகளில் அனல் பறக்க தொடங்கிவிடும். அப்படித்தான் இப்போது தமிழக அரசியலில், 'டபுள்' என்ஜின், 'டப்பா' என்ஜின், 'டாப்' என்ஜின் என்று 'என்ஜின்' அரசியல் சூட்டை கிளப்பி வருகிறது.

டப்பா என்ஜின் ஓடாது

கடந்த மாதம் 23-ந் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் டபுள் என்ஜின் சர்க்கார் தமிழ்நாட்டிற்கு தேவை" என்று பேசி அரசியலில் சூட்டை கிளப்பினார். அதனால் எழுந்த அனலை மேலும் கிளறிவிடும் வகையில், கடந்த மாதம் 25-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "டபுள் என்ஜின் என்று சொல்லி வடமாநில மக்களை ஏமாற்றி, அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கின்ற உங்கள் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது" என்று பதிலடி கொடுத்தார்.

ஒரு விரல் புரட்சி

இந்த சூடு தணிவதற்குள், நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "இந்த டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின் என எவ்வளவு என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் நமது கட்சி தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

இப்படி என்ஜின் அரசியல் இப்போது தமிழ்நாட்டில் அனல் கக்கும் நிலையில், அந்த 3 என்ஜின்களுக்கான சாவிகள், தேர்தல் அன்று 'ஒரு விரல் புரட்சி' மூலம் மதிப்பெண் அளிக்கப்போகும் மக்கள் கைகளில்தான் இருக்கின்றன. எந்த என்ஜின் சாவியை யார் கையில் கொடுக்கப்போகிறார்கள்? என்பது, தீர்ப்பு வரும் நாளான, அதாவது தேர்தல் முடிவு வெளிவரும் அன்று தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com