இன்னும் எத்தனை நாட்கள்தான் வாங்கும் இடத்தில் நாம் இருப்பது? - மு.க.ஸ்டாலின் கேள்வி

நாம் கொட்ட கொட்ட குனியக்கூடியவர்கள் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.
இன்னும் எத்தனை நாட்கள்தான் வாங்கும் இடத்தில் நாம் இருப்பது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை,

மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பகுதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நில உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நாம் இன்னமும் கடுமையாக போராடி வரும் சூழல்தான் இருக்கிறது. எனவே எல்லா அதிகாரங்களையும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை நாம் தொடங்க கூடிய நாள்தான் இன்றைய நாள்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை கொள்கையாக திமுக கொண்டுள்ளது. மாநில சுயாட்சிக்காக அரசமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை திருத்த முடியும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக மத்திய- மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வின் முதல் பகுதி அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

ஒரு மாநிலமாக நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவிற்கு நம்மிடம் அதிகாரங்கள் இல்லை. ஏனென்றால் மாநில உரிமைகள் வழங்கும் ஒரு மத்திய அரசு அமையவில்லை. இருக்கும் அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான் சமூக நீதியில், கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில், உள்கட்டமைப்பு வசதிகளில் நாம் முன்னேறி வருகிறோம்.

மத்திய அரசிடம் இருந்து உரிமைகளை பெற இன்னமும் போராடும் நிலை உள்ளது; எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் ஒன்றியத்தின் தயவை எதிர்பார்த்துள்ள நிலை உள்ளது. மத்திய அரசு கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இருப்பது?. கூட்டாட்சி கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல. நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் கொட்ட கொட்ட குனியக்கூடியவர்கள் இல்லை. மாநில சுயாட்சி குறித்த பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் உயிலுக்கு உயிர் கொடுக்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கத்தை நிறைவேற்ற வேண்டும். மாநில சுயாட்சிக்கு வலிமையான ஆதரவு தெரிவிக்க ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கின்றனர். மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்பை நாம் தான் செய்ய வேண்டும் நம்மை விட்டால் வேறு யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com