

மதுரை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் தி.மு.க. அமைச்சரான ராஜ கண்ணப்பன், அவர்கள் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். கூட்டணியை நம்பி கட்சி நடத்த முடியாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.
இந்நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, “காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்
காங்கிரசை சாதாரணமாக நினைத்து பேசுகின்றனர். நீங்கள் (திமுக) செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம். திருப்பி அதே வார்த்தையை பேசுவோம்.
எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக்கு 70 நாளாக காத்திருக்கிறோம். தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை எதிர்பார்க்கிறோம். சொத்து சுகம் கேட்கவில்லை, நான் கேட்பது மரியாதை மட்டும்தான். காங்கிரஸ் குறித்த தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சு வேதனை அளிக்கிறது
உண்மையாக பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரசாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.