

சென்னை,
ஆட்சியில் பங்கு விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
முதல்-அமைச்சர் சொன்னது அவரது கருத்து, அவரது கட்சியின் கருத்து. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றி அவர் பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு கருத்து இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். முதல்-அமைச்சர் கருத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை, எதிர்பார்ப்பு குறித்து எங்கள் தலைமை பேசி விட்டார்கள்.
இறுதி முடிவை இரு கட்சிகளின் தலைமைகள் கூடிப் பேசி முடிவு செய்வார்கள். எங்களுக்குள் இருக்கும் விஷயங்களை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணிதான் தேர்தலில் வெல்லும். கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக - காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது நடக்காது.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். அது எடுபடாது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸ்சிற்கு நன்றாக தெரியும்” என்று அவர் கூறி இருந்தார்.