

சேலம்,
தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் இன்று சேலம் வருகிறார். அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் திடலுக்கு செல்வார்.
இந்த கூட்டத்திற்காக த.வெ.க.வினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும்; இருக்கைகள் அமைக்கக்கூடாது. கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் தவிர யாருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்; வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இதுவரை த.வெ.க.வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. தனித்தே போட்டியிட த.வெ.க. தயாராகி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.