மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: வேலூருக்கு 23-ந்தேதி விஜய் வருகை- போலீசார் கடும் நிபந்தனைகள் விதிப்பு

வேலூரை அடுத்த அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: வேலூருக்கு 23-ந்தேதி விஜய் வருகை- போலீசார் கடும் நிபந்தனைகள் விதிப்பு
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் நேற்று த.வெ.க. மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத்கண்ணன், பொருளாளர் பிரசாந்த் ஆகியோரிடம் வழங்கி, அதனை பூர்த்தி செய்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கும்படி கூறினார்.

இதுதொடர்பாக வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கிறார். 23-ந் தேதியை உறுதிப்படுத்தி விரைவில் தெரிவிப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். நிகழ்ச்சியையொட்டி காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படும் அனைத்து நிபந்தனைகளையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். வேலூரை அடுத்த அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதி, வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார். அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம். அதேபோன்று நிகழ்ச்சிக்கு முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்பும் இன்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com