

சென்னை,
தமிழகத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக- பாஜக தலைமையிலான ஒரு அணியும் விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக - பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த பாஜக மேலிடம் தீவிர முயறி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட பிரச்சினை என நெருக்கடியை சந்தித்து வரும் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இதனை திட்டவட்டமாக தற்போது பாஜக மறுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறியதாவது: “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல..திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது. தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது. திரையுலகில் ரசிகர்களை வைத்து இருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயம்” என்றார்.