த.வெ.க.வின் வருகை யாருடைய வாக்கு வங்கியை பாதிக்கும்..? எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
த.வெ.க.வின் வருகை யாருடைய வாக்கு வங்கியை பாதிக்கும்..? எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

ஆம்பூர்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டமன்றத் தேர்தல் வருகின்ற காரணத்தால், தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது வடிகட்டிய பொய். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது, உரிமைத் தொகை பெற்றுவந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்குமே அந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி இதை நிறுத்த முடியும்?

இரண்டாவது ஒரு அரசு கொண்டுவந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வரும்போது, அதை எப்போதுமே தேர்தல் நேரத்தில் நிறுத்துவது கிடையாது. அந்த அடிப்படையில்தான் 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் தேர்தல் தோல்வி குறித்த பயத்தால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு பிப்ரவரி மாதம் தானாக கிடைக்கும். மார்ச் மாதம் கிடைக்கும். ஏப்ரல் மாதம் கிடைக்கும். இருந்தாலும் இந்த 3 மாத தொகையும் முன்பணமாக கொடுத்து, அதோடு கோடைகால சிறப்புத் தொகுப்பு ஒன்று கொடுத்து அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தலிலே தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

கோடைகால சிறப்பு தொகுப்பு அறிவித்திருக்கிறார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு கோடை காலம் வந்தது. 23, 24, 25-ம் ஆண்டும் கோடை காலம் வந்தது. ஆனால் தேர்தல் நடக்கின்ற இந்த 2026-ம் ஆண்டு மட்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்ணுக்கு எப்படி தெரிகிறது? இது முழுக்க முழுக்க தேர்தலை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு. உரிமைத் தொகை பெறும் குடும்பத் தலைவிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து இதை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சித்தான் இந்த தொகையைக் கொடுக்கிறார்.

இந்த மூன்று மாதம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அப்போது அறிவித்தார். ஆனால் 27 மாதங்கள் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.

பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். தேர்தல் நேரத்தில் வெளியிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. அதை நம்பி குடும்பத் தலைவிகள் வாக்களித்திருக்கிறார்கள் என்று 27 மாதமும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்திக்கொண்டு இருந்தோம். உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

ஏழைக் குடும்பத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளை ஏமாற்றக்கூடாது என்று தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம். அதிமுக பொதுக்கூட்டங்களிலும், பேட்டிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 27 மாதங்கள் கழித்து, அதாவது 28வது மாதம்தான் இந்த உரிமைத் தொகையைக் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பாதிக்கப்படவில்லையா..?

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார். ஆனால் இப்போது 1.31 கோடி மகளிருக்கு மட்டுமே தருகிறார். மற்றவர்களை ஏமாற்றிவிட்டார். அண்மையில் 2 மாதங்களுக்கு முன்பு விதிகளைத் தளர்த்தி மேலும் 20 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்து, கடந்த இரண்டு மாதங்களாக கொடுத்துவருகிறார்.

ஏற்கெனவே 27 மாசம் கிடைக்கவில்லை. 32 மாசம்தான் கிடைச்சிருக்கு. மற்றவர்களுக்கு 5 மாதம்தான் கிடைத்திருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு 55 மாதம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் இந்த மக்கள் பாதிக்கவில்லையா? ஸ்டாலின் அவர்களே, பொய் சொன்னாலும் பொருந்துகிற மாதிரி சொல்லுங்கள். மக்கள் நம்புகிற மாதிரி சொல்லுங்கள்.

அதோட லேப்டாப் கொடுப்பது குறித்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இது மாணவர்களின் திறமையை மேம்படுத்தவும், விஞ்ஞானக் கல்வி கிடைக்கவும் அம்மாவின் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டம். அதிமுக ஆட்சியில் சுமார் 5 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு நாங்கள் கொடுத்தோம். இந்த ஆட்சி வந்த பிறகு அந்த திட்டத்தை முடக்கிவிட்டார்கள்.

இப்போது இளைஞர்களின் வாக்குகள் தேவை. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவசர அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கிறார். அதுவும் எப்போது கொடுக்கிறார்? 2025-ல் கல்லூரி திறக்கும்போதே இந்த திட்டத்தைக் கொண்டுவந்திருந்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும். ஆனால், அவர்கள் கடன் வாங்கி லேப்டாப் வாங்கிய பிறகு இப்போது கொடுக்கிறார். அதனால் மாணவர்களுக்கு உபயோகம் இல்லாமல் போய்விட்டது

மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இப்போது கொடுக்கிறார்கள். அதுவும் பிரயோஜனமில்லை. கொடுக்கிற பொருளை உரிய நேரத்தில் கொடுத்தால்தான் அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் வாக்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த லேப்டாப் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “இதுவரை இல்லை. நாளை சேலம் வருகிறார். அவருடைய கட்சி நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக வருகிறார். வாய்ப்பு இருந்தால் நாங்கள் சந்திப்போம்” என்று கூறினார்.

பின்னர் தவெக வருகை யாருடைய வாக்கு வங்கியை பாதிக்கும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் இன்னும் ஒரு முறைகூட தேர்தலை சந்திக்கவில்லை. தேர்தலை சந்திக்கும் முன் யாரையும் கண்டுபிடிக்க முடியாது. தமிழக வாக்காளப் பெருமக்கள் விழிப்புணர்வு உடையவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த ஆட்சி வந்தால் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதும் தெரியும்.

அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. தமிழகம் இந்த அளவுக்கு உயர காரணம் இந்த கட்சிதான். அதிமுக ஆட்சியின் வரலாறு மக்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல நன்மைகள் தெரியும். எத்தனை மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்? எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கி இருக்கிறோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com