புதுவையில் 2-வது நாளாக அலைமோதிய சுற்றுலா பயணிகள்


புதுவையில் 2-வது நாளாக அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x

புதுவையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. விடுதியில் அறை கிடைக்காதவர்கள் மொட்டை மாடியில் கொட்டும் பனியில் தூங்கி எழுந்தனர்.

புதுச்சேரி

புதுவையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. விடுதியில் அறை கிடைக்காதவர்கள் மொட்டை மாடியில் கொட்டும் பனியில் தூங்கி எழுந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புதுவையில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் கடற்கரை, ஓட்டல்களில் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

கொரோனா தொற்று குறைந்தபடியால், 2 ஆண்டுக்கு பின் மது விருந்துடன் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. புத்தாண்டை கொண்டாடியவர்களில் பலரும் இன்று புதுவையில் தங்கியிருந்தனர். அவர்கள் புதுவையின் சுற்றுலா தலங்களான கடற்கரை, படகு குழாம், ஊசுடு ஏரி, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.

2 லட்சம் பேர் திரண்டனர்

அவர்களோடு உள்ளூர் மக்களும் நகரப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டது. வீதிகளில் எங்கு பார்த்தாலும் வெளிமாநில வாகனங்கள் வலம்வந்தபடி இருந்தன. 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் புதுவையில் திரண்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுக்காக ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல ஓட்டல்களில் உணவு விரைவாக காலியானதால் ரோட்டோர கடைகளிலும் விற்பனை சூடுபிடித்தது.

கொட்டும் பனியில் தூக்கம்

வெளியூர்களில் இருந்து புத்தாண்டை கொண்டாட வந்திருந்த பலரும் இரவு அறைகள் இன்றி பல்வேறு ஓட்டல்களின் மாடியில் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் தூங்கி எழுந்தனர். அவர்களிடம் நபர் ஒருவருக்கு ரூ.500 வரை வசூலிக்கப்பட்டது.

புதுவையின் பிரசித்திபெற்ற சண்டே மார்க்கெட்டிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் துணிகள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

ஆனந்த குளியல்

கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் பலரும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். அவர்களை கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் எச்சரித்தபடி இருந்தனர். நேற்று கடல் அருகிலேயே செல்ல அனுமதிக்காத நிலையில் இன்று கடல் பகுதியில் அனுமதித்ததால் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை நோக்கி படையெடுத்தபடி இருந்ததால் நகரப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபடி இருந்தது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், காரைக்கால் கடற்கரையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திரைப்பட பின்னணி பாடகர்கள், சின்னத்திரை புகழ் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் சுற்றுலாத்துறை சார்பில் கண் கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது.


Next Story