புதிய சட்டமன்ற வரைபடம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை

தட்டாஞ்சாவடியில் 6 மாடிகளுடன் அமைய உள்ள புதிய சட்டமன்ற கட்டிட வரைபடம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
தட்டாஞ்சாவடியில் 6 மாடிகளுடன் அமைய உள்ள புதிய சட்டமன்ற கட்டிட வரைபடம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதிய சட்டமன்ற கட்டிடம்
புதுவை சட்டசபை பழமைவாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் அவ்வப்போது பழுது பார்க்கும் பணிகளும் நடக்கின்றன.
தற்போது இங்கு இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் புதிதாக சட்டசபை கட்டிடம் கட்ட நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு வருகிறது. புதிய சட்டசபையை தலைமை செயலகத்துடன் தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி இடத்தில் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரைபடம் தயாராகிறது
இதுதொடர்பான வரைபடம் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தினர் வெளிப்புற தோற்றம் தொடர்பான புதிய வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புதிய கட்டிடம் தொடர்பாக விளக்கம் அளித்தனர். அப்போது புதிய வரைபடம் குறித்த காட்சியும் அவருக்கு வீடியோவாக காண்பிக்கப்பட்டது.
அப்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனையும் நடத்தினார்.
6 மாடி கட்டிடம்
புதிய சட்டமன்ற கட்டிடமானது 6 மாடிகளை கொண்டதாக அமைய உள்ளது. இங்கு சட்டமன்ற கூட்ட அரங்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அலுவலகம், கமிட்டி அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.
அதன் அருகிலேயே தலைமை செயலகம் 5 மாடிகளில் கட்டப்பட உள்ளது. இந்த வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய கட்டிடம் ரூ.450 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன வசதிகள்?
தற்போது வெளிப்புற தோற்றத்தை மட்டும் தயார் செய்துள்ள தனியார் நிறுவனத்தினர் விரைவில் கட்டிடத்தின் உள்ளே எங்குகெங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும்? என்று வரைபடம் தயாரிக்க உள்ளனர்.
அந்த வரைபடம் தயாரானதும் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.






