தனியார் மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது


தனியார் மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது
x

புதுவையில் நடந்த விழாவில் தனியார்மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதுச்சேரி

தனியார்மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சி பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான எல்.முருகன் இன்று புதுவை வந்தார். புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

14 ஆயிரம் வீடுகள்

பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேசிய அளவில் 4 கோடி வீடுகளும், புதுச்சேரியில் 14 ஆயிரம் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பயனாளிகளுக்கு 100 சதவீத திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவளிக்கும் வகையில் 80 கோடி பேருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்டவை வருகிற டிசம்பர் மாதம் வரை ரேஷனில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழர்களுக்கு கவுரவம்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின்போது தமிழ் கலாசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இது தமிழர்களுக்கான கவுரவம். பிரதமரின் தொலைநோக்கு நடவடிக்கையால் வருகிற 2047-ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். காங்கிரஸ் ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது தொடங்கியது. எனவே தனியார்மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மின்னணு திரைக்காட்சியுடன் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை தேசிய செயலாளர் சத்தியகுமார் விளக்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், சிவசங்கர், வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story