புதுச்சேரியில் ஜி20 மாநாடு


புதுச்சேரியில் ஜி20 மாநாடு
x

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 70 பேர் பங்கேற்றனர். இதில் உலகளாவிய சுகாதாரம், அறிவியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் ஜி20 மாநாடு இன்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 70 பேர் பங்கேற்றனர். இதில் உலகளாவிய சுகாதாரம், அறிவியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜி20 மாநாடு

ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்கள் என தேர்வு செய்து 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

புதுவையில் தொடங்கியது

இந்த வகையில் புதுச்சேரியிலும் இந்த மாநாடு ஜனவரி 30, 31-ந் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி புதுவை முதலியார்பேட்டையில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் இன்று காலை 9.30 மணிக்கு மாநாடு தொடங்கியது.

'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற லட்சியத்தில் ஒட்டு மொத்த நீண்ட கால வளர்ச்சியில் அறிவியலை பயன்படுத்துவது' என்ற தலைப்பில் இந்த மாநாடு தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ரங்கராஜன் வரவேற்றுப் பேசினார். அறிவியல்-20 இன் இந்திய தலைமை பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா தொடங்கி வைத்து பேசினார்.

பிரதிநிதிகள்

மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா, இந்தோனேஷியா, பிரான்ஸ், ரஷியா, பிரேசில் உள்பட உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியாவின் நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என 70 பேர் கலந்து கொண்டனர்.

இதில் உலகளாவிய சுகாதாரம், பசுமையான எதிர்காலத்துக்கு தேவையான தூய ஆற்றலை பெறுதல், அறிவியலை சமூகம் மற்றும் கலாசாரத்துடன் இணைத்தல் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மாநாடு மாலை வரை நடந்தது.

பின்னர் மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஏற்கனவே தங்க வைக்கப்பட்டு இருந்த நட்சத்திர ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சர்வதேச நகரம்

ஜி20 மாநாட்டுக்கு வந்துள்ள அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச நகரான ஆரோவில் செல்கிறார்கள். அங்குள்ள மாத்ரி மந்திர் பகுதியை பார்வையிடுவது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள், வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கருதி அவர்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெற்ற இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கி இருந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களை வரவேற்கும் விதமாக நகரம் முழுவதும் அரசு சார்பில் முக்கிய சாலைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story