'கம்ப ராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது'


கம்ப ராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது
x

கம்ப ராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி

கம்ப ராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கம்பன் விழா

புதுவையில் 3 நாட்கள் நடக்கும் கம்பன் விழா நேற்று தொடங்கியது. கம்பன் கலையரங்கத்தில் நடந்த விழாவுக்கு ஐகோர்ட்டு நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை தாங்கினார். கம்பன் கழக புரவலரான முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். விழா மலரை சபாநாயகர் செல்வம் வெளியிட்டார். மேலும் சிறந்த தமிழ் புலவர்களுக்கான பரிசுகையும் வழங்கினார். கம்பன் தொடர்பான புத்தகங்களை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

விழாவினை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். கம்ப ராமாயணத்தை படித்தால் இளைஞர்கள் கவலைகளில் இருந்து விடுபட முடியும். தற்கொலை எண்ணங்களில் இருந்தும் வெளிவரலாம்.

மகிழ்ச்சியையும், வேதனையையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. உடலுக்கும், மனதுக்கும் நன்மை தருவது ராமாயணம். இதனை படித்தால் யாருக்கும் மன அழுத்தம் வராது. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று ராமாயணம் சொல்லி கொடுக்கிறது.

தவறு செய்யமாட்டார்கள்

இந்தியாவில் கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், மாணவர்களாக உள்ளனர்.

குற்றங்கள் குறைய வேண்டும் என்று ராமாயணம் கூறுகிறது. அதை படித்தால் யாரும் தவறு செய்யமாட்டார்கள். இன்றயை இளைஞர்கள் பள்ளி பாடத்தை தவிர வேறு எதையும் படிப்பதில்லை. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தத்துவத்தை ராமாயணம் கற்று தருகிறது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ஐகோர்ட்டு நீதிபதி

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:-

ஒரு நாட்டின் பெருமை பொருளாதாரத்தில் இல்லை என்று பிரெஞ்சு அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். அதன் கலாசாரம், பண்பாட்டை சார்ந்துதான் உள்ளது. அப்படி பார்த்தால் படைப்பில் சிறந்ததாக நமது நாடு உள்ளது.

ரத்னாகரன் என்ற வால்மீகி ராமாயணத்தை தந்தார். இந்த ராமாயணம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விரும்பி படிக்கப்படுகிறது. 2-வது நூற்றாண்டு முதல் 6-வது நூற்றாண்டுவரை களப்பிறர் ஆட்சி காலத்தில் இருண்ட சூழ்நிலை நிலவியது. அந்த காலத்தில்தான் பக்திநெறி சார்ந்த இலக்கியங்கள் உருவானது.

12-ம் நூற்றாண்டில் கம்பன், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தனது படைப்பினை உருவாக்கினான். கம்பனின் படைப்புகளில் ஆளுமை, நதி, மதம், விலங்குகள், வயல்வெளிகள் என அனைத்தை பற்றியும் பதிவு செய்துள்ளான். தமிழ் சாதாரண மொழி அல்ல என்று அறிய செய்தவன் கம்பன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரங்கசாமி

முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்கள் முன்பு 3 நாள் கொண்டாடப்பட்டு அது 2 நாள், ஒரு நாள் என்று சுருங்கிப்போய் விட்டது. ஆனால் கம்பன் விழா ஒவ்வொரு ஆண்டும் மெருகேறி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

புதுவை கம்பன் கழகம் கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழை வளர்த்து வருகிறது. கம்ப ராமாயணத்தை படிப்பவர்களுக்கு அதன் இனிமை தெரியும். இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு பெருமை சேர்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், அனிபால் கென்னடி, வி.பி.ராமலிங்கம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கம்பன் கழக செயலாளர் சப்தகிரி சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story