ரூ.483 கோடியில் சட்ட பல்கலைக்கழகம்


ரூ.483 கோடியில் சட்ட பல்கலைக்கழகம்
x

நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து ரூ.483 கோடியில் சட்ட பல்கலைக்கழகம் கட்டப்படும் மற்றும் சிறப்பு திட்டகளை அறிவித்தார்.

புதுச்சேரி

நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் கோலாகல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழா நடக்கும் கடற்கரை காந்தி திடலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி காலை 8.54 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வரவேற்று நேராக விழா மேடைக்கு அழைத்து சென்றார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பினை நடந்து சென்று பார்வையிட்டனர்.

அதன்பின் மேடைக்கு திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நவீன கறவை எந்திரம்

நமது நாடு சுதந்திரம் பெற்றபோது பெரும் சவால்களும், பொறுப்புகளும் நம்மை சூழ்ந்திருந்தன. இப்போது நாம் கடந்து வந்துள்ள வளர்ச்சியின் வெற்றி பாதையை திரும்பி பார்க்கும்போது பெருமிதம் மேலிடுகிறது. பிரதமர் மோடியின் ஆசியோடு, புதுவை மாநிலத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நமது விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவதை கருத்தில்கொண்டும், தண்ணீர் தேவைகளை குறைத்து பயன்படுத்தவும் பசுந்தீவனத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கவும் நவீன மண் இல்லா பயிரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நவீன பால் கறவை எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

துறைமுகம் விரிவாக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 17 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம், மருத்துவ கவுன்சில் அமைக்க மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

புதுவையில் ஒரு சித்த மருத்துவக்கல்லூரியும், காரைக்காலில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு ஆயுஷ் மருத்துவமனையும் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்படும். பெரிய காலாப்பட்டில் ரூ.20.14 கோடி மதிப்பீட்டிலும், நல்லவாடில் ரூ18.94 கோடி மதிப்பீட்டிலும் மீன் இறங்குதளம் அமைக்கவும், தேங்காய்த்திட்டில் மீன்பிடி துறைமுகத்தை ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

வீடுகட்ட மானியம் உயர்வு

காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தையும் சேர்த்து பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கல்வீடு கட்டிக்கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகையை ரூ.5 லட்சத்து 50 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலப்பு திருமண ஊக்குவிப்பு தொகையை ரூ.2 லட்சத்து 50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் காலியாக இருந்த 253 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 500 ஊர்க்காவல் படையினர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. 165 இளநிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் ரூ.120 கோடி செலவில் சுமார் ரூ.151 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 354 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் ரூ.197 கோடி செலவில் புதியதாக மேம்படுத்தப்பட உள்ளன. காரைக்காலில் 30 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.

சட்ட பல்கலைக்கழகம்

புதுவை தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடி செலவில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடி செலவில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கிழ் ஒரு மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட கட்டமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.14.50 கோடியாகும். மழைக்காலத்துக்கு முன்பாக இந்த ஆண்டு அனைத்து வாய்க்கால்களும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4.50 கோடி செலவில் மழைக்காலத்திற்கு முன்பாகவே தூர்வாரப்படும்.

படுகை அணை

அதேபோல் ரூ.20.40 கோடியில் பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை கட்டுதல், ரூ.8.05 கோடியில் பாகூர் ஏரிக்கரையில் ஒருவழிபாலம் கட்டுதல் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல், ரூ.13.12 கோடியில் கொம்பந்தான்மேடு அணைக்கட்டு பகுதியில் கரைகளை செம்மைப்படுத்துதல், ரூ.2.10 கோடியில் சாத்தமங்கலம் கிராமம் குடுவையாற்றில் படுகை அணை கட்டுதல் போன்ற பணிகள் தொடங்கப்படும்.

நகரப்பகுதியில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு முறை ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.

25 மின்சார பஸ்கள்

பி.ஆர்.டி.சி.-க்கு ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே ஓடும் பஸ்களுக்கென தனி பஸ் நிலையம் கட்டப்படும். புதுவை நகரப்பகுதியில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டம் ரூ.50 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின்கீழ் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பாரம்பரியம், ஆன்மிகம், கலாசாரம், கடற்கரைகள், உப்பங்கழிகள் உள்ளடக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் 'பிரசாத்' திட்டத்தின்கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார். அதன்பின் காவல்துறை, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. இறுதியாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. சிறந்த அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதன்பின் சட்டசபை வளாகத்திலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ், நாரா.சைதன்யா உள்ள அரசு துறையில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story