மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x

புதுவை பெரியார் நகரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை பெரியார் நகரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தினமும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் பெரியார் நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு திடீரென மின்தடை செய்யப்பட்டது. இரவு 8 மணி மேலாகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நெல்லித்தோப்பு சந்திப்பில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்தனர். மேலும் அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ. வந்து மின்தடை பிரச்சினை தீர்வு காணப்படும் என உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே இரவு 9.30 மணி அளவில் திடீரென மழைபெய்யத்தொடங்கியது. இதன் காரணமாக மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். ஆனால் 15-க்கும் மேற்பட்டவர்கள் மழையில் நனைந்தபடி மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.


Next Story