பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்


பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்    பாதுகாப்பு பலப்படுத்தப்படும்
x

புதுவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி

புதுவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

முழு அடைப்பு போராட்டம்

இந்துக்களுக்கு எதிராக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற இருப்பதாலும், வியாபாரம் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் முழு அடைப்பு போராட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா முன்னிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இந்து முன்னணியினரிடம், பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்களின் நலன் கருதி முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர்கள், 'தங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளோம். பள்ளி மாணவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம்' என்றனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

புதுவையில் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. புதுவை, காரைக்காலில் திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்கப்படும். தேர்வுகள் 30-ந் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு ஒரு வாரம் விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்திற்காக பள்ளிகள் திறக்கப்படும்.

முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் நாள் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story