ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது


ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது
x

புதுவை மாநிலத்தில் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என இடமாறுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என இடமாறுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இடமாறுதல் பிரச்சினை

புதுவையில் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்வது தொடர்பாக அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. பணியிடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் புதிய பணியிடங்களுக்கு செல்லாமல் இருப்பதும், போராட்டங்கள் நடத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக சட்டமன்றம், முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவது என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. பலமுறை கருத்துகேட்டு உருவாக்கப்பட்ட இடமாறுதல் கொள்கையையும் சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர்.

சுற்றறிக்கை

இந்தநிலையில் இடமாறுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2023-24-ம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள்படி இடமாறுதல் வழங்கப்படும். இடமாறுதல் கொள்கையை மாற்றுவதற்கான இடைவெளியில் மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பணிபுரிய...

அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ச்சியாக பணிபுரிய முடியாது. இதர பிராந்தியங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் சொந்த பிராந்தியத்துக்கு திரும்புவார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த இடமாறுதலில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள், கேன்சர், நரம்பியல் தொடர்பான ஆபரேசன் செய்துகொண்டவர்கள், கிட்னி, கல்லீரல், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

55 வயதுக்கு மேல்...

தலைமை ஆசிரியர் (தொடக்கப்பள்ளி), ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு 55 வயதுக்கு மேல் இருந்தால் பிற பிராந்தியங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படமாட்டாது. 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற விலக்கு அளிக்கப்படும். இதுபோன்ற விலக்குகளை பெற உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்றவை விலக்குக்கான காரணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இடமாறுதல் பட்டியலானது பிற பிராந்தியங்கள், கிராமப்புறம், நகர்ப்புறங்களில் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு தயாரிக்கப்படும், புதுவை (பிரிவு-2), காரைக்கால், மாகி, ஏனாம் பகுதி பள்ளிகள் கிராமப்புற பள்ளிகளாக கருத்தில் கொள்ளப்படும்.

மூத்தவர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர்கள், ஊழியர்கள் அயல் பணிக்கு சென்றிருந்தால் பணிக்காலமாகவே கருதப்படும். இரு நபர்கள் ஒரே அளவிலான தகுதிகளை பெற்றிருந்தால் மூத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆசிரியர்கள், ஊழியர்கள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்தந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்களை கொண்டு காலியிடங்கள் நிரப்பப்படும். முடியாதபட்சத்தில் பிற பிராந்தியங்களை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்பப்படும்.

கல்வி நிறுவன தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாக காரணங்களுக்காக கல்வித்துறை இயக்குனர் நிராகரிக்கலாம்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story