ஹெல்மெட் அணிவது கட்டாயம்


ஹெல்மெட் அணிவது கட்டாயம்
x

புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி

புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு பக்க பார்க்கிங்

புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேரு வீதியில் 2 பக்கங்களிலும் வாகனம் நிறுத்தம் முறை தடை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் முன்பு இருந்ததுபோல் நேரு வீதியில் வடக்கு பக்கம் மட்டும் ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறையானது முன்பு இருந்ததுபோல் 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப் படும்.

கனரக வாகனங்களுக்கு தடை

பொதுப்பணித்துறை சார்பில் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செஞ்சி சாலையின் குறுக்கே சேதமடைந்த கால்வாய் புனரமைப்பு பணி நடக்கிறது.

இதனால் வருகிற 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்த சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. அதன்படி புதுச்சேரி நோக்கி மகாத்மாகாந்தி வீதி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அஜாந்தா சிக்னலில் இருந்து வலதுபுறமாக திரும்பி அண்ணா சாலையில் சென்று 45 அடி ரோடு, வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை வழியாக செல்ல வேண்டும். அதேநேரத்தில் இலகுரக (கார்) மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தலாம்.

ஹெல்மெட் கட்டாயம்

புதுவை மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் (வாகன ஓட்டி மற்றும் அமர்ந்து செல்பவர்) தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை மீறி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இந்த நடவடிக்கையை அனைவரும் பின்பற்றி புதுச்சேரி போக்குவரத்து காவல் பிரிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சாத்தியமாகுமா?

புதுவையில் ஏற்கனவே போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை அரசு ஊழியர்கள் கடைபிடிப்பதில்லை.

இதற்கு முன் கவர்னராக கிரண்பெடி இருந்தபோது அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனாலும் அப்போது மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

இந்த சூழலில் தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்து இருப்பது எந்த அளவுக்கு சாத்தியமாகும்? என்பது நடைமுறைக்கு வரும் போது தெரியவரும்.

இதற்கிடையே ஹெல்மெட் அணிவது தொடர்பாக போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


Next Story