உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் , கோர்ட்டுக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, ரேபரேலி கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அப்பெண்ணை கடுமையாக தாக்கினர். பின்னர், அவர் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீவைத்தனர். இளம்பெண் மீது தீப்பற்றி எரிந்தது. அவர் அதே கோலத்தில் சிறிது தூரம் ஓடினார்.

உடனே சிலர் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த பெண்ணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, லக்னோவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு அந்த இளம்பெண், கோட்டாட்சியர் தயாசங்கர் பதக்கிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், தான் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் 5 பேர் தன்னை வழிமறித்து தாக்கி தீவைத்து எரிந்ததாக அவர் கூறினார்.

இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக ஆஸ்பத்திரியின் மருத்துவ சூப்பிரண்டு அசுதோஷ் துபே கூறினார். தீவைத்து எரித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை அந்த பெண், மேல்சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். அவர் தாமதமின்றி, லக்னோ விமான நிலையத்தை அடைவதற்காக, அவர் சென்ற பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

லக்னோவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் டாக்டர் கள் குழுவும் சென்றது.

இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரியும், மாநில முதல்-மந்திரியும் நேற்றுதான் கூறினர். அதற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, கோபத்தை தூண்டுகிறது. பா.ஜனதா தலைவர்கள் பொய் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண் டும் என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இதற்கு முதல்-மந்திரி வெட்கப்பட வேண்டும். டி.ஜி.பி. பதவி விலக வேண்டும். இதில், நாடகம் போடாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பும், உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com