ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது.. விலை குறையும் பொருட்கள் எவை? - முழு விவரம்


ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது.. விலை குறையும் பொருட்கள் எவை? - முழு விவரம்
x
தினத்தந்தி 22 Sept 2025 10:54 AM IST (Updated: 22 Sept 2025 11:07 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை குறைய வாய்ப்புள்ளது.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் அதிக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.

ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் விலை குறையும் பொருட்கள் விபரம்..

உணவுப் பொருட்கள்

* ரெடிமேட் பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறையும்.

* சாக்லேட்டுகள், ரெடிமேட் பாஸ்தா, நுாடுல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால், அவற்றின் விலையும் குறையும்.

* நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையும் குறையும். உதாரணத்துக்கு, 1 கிலோ நெய் 40 - 50 ரூபாய் வரை குறையும்.

* உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

வீட்டு உபயோகப் பொருட்கள்

* ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் மற்றும் 32 அங்குலத்துக்கு மேல் உள்ள டிவிக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைந்துள்ளது.

* சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.

* பானை, குக்கர், தட்டு, கரண்டி, அடுப்பு, கண்ணாடி, கத்தி, மேசை கரண்டி விலை குறையும்.

வாகனங்கள்

* சைக்கிள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 3,500 ரூபாய் வரை விலை குறையும்.

* ஆடம்பர கார்களை தவிர, 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், விலை குறையும்.

* 350 உட்பட்ட 'சிசி'க்கு இருசக்கர வாகனம் மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால், அதன் விலை ரூ.10,௦௦௦ முதல் ரூ.30,000 வரை குறையும்.

இதர பொருட்கள்

* மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை ஆகியவற்றின் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றின் விலை குறையும்.

* மூக்கு கண்ணாடி, லென்சுகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.

* பென்சில், ரப்பர், 'மேப்' மீதான வரி முற்றிலும் நீக்கப் பட்டுள்ளது.

* சிமென்ட் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், மூட்டைக்கு 40 ரூபாய் வரை குறையும்.

1 More update

Next Story