

இன்றைய காலகட்டத்தில் தாங்களும் வளர்ச்சியடைந்து வருகிறோம் என்பதை காட்ட உலக நாடுகள் தேர்ந்தெடுக்கும் ஒரே துறை விண்வெளி ஆய்வாகும்.
பிரபஞ்சம் எப்படி முடிவில்லாததோ அதேபோல விண்வெளி ஆராய்ச்சியும் முடிவில்லாதது. முதலில் விமான பயணம் பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது. இன்று அதுவும் சாமானியர்கள் சென்று வரும் சாதாரண பயணமாகிவிட்டது. அதேபோல விண்வெளி பயணமும் ஒரு நாள் சாமானியர்களுக்கும், சாதாரணமான பயணமாகிவிடும். ஆனால் சாதாரணமாக விமானத்தில் பறப்பதற்கும், விண்வெளி பயணத்திற்கும் வித்தியாசம் உள்ளதா? என்று கேட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல கூறலாம். ஆம், விண்வெளி பயணம் என்பது மிக சாதாரணமானது அல்ல. சாதாரணமாக ஒரு மனிதன் பூமியில் இருப்பதற்கும் காற்று, புவியீர்ப்பு விசை, இரவு பகல், திசை இப்படி எதுவுமே இல்லாத சூழ்நிலையில் மனிதன் சென்று வருவதற்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேசமயம், சவாலான விஷயமும்கூட. விண்வெளி பயணம் குறித்த அத்தகைய சவாலான விஷயங்களை தொகுத்திருக்கிறோம்.
விண்வெளியில் சந்திக்கும் முதல் பிரச்சினை ஜீரோ கிராவிட்டி. அது என்ன ஜீரோ கிராவிட்டி? அதாவது புவியீர்ப்பு விசை இல்லாமல் இருக்கும் நிலையே இதுவாகும். அதேபோல ஈர்ப்பு விசைக் கொஞ்சம் இருக்கும் நிலையை மைக்ரோ கிராவிட்டி என்றும் அழைப்பார்கள். விண்வெளி முழுக்க இந்த நிலைதான். எனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேலை செய்யவிருப்பவர்கள், விண்வெளி பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த புவியீர்ப்பு விசை இல்லாத சூழ்நிலையில் எப்படி செயல்படவேண்டும் என்று புரிந்து கொள்வது அவசியம். அதற்காகவே அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய நாட்டின் யூரிகாகரின் விண்வெளி பயிற்சி மையம் போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கின்றன.
ஜீரோ கிராவிட்டி என்பது எந்தப் பாரபட்சமும் பார்க்காது. அது எல்லாப் பொருட்களையும் ஒரே எடையாகத்தான் எடுத்துக்கொள்ளும். அதாவது, இயல்பான ஈர்ப்பு விசையுள்ள சூழலில் ஒரு பந்தையும், கோழி இறகையும் மேலிருந்து கீழ் வீசினால் பந்து வேகமாகத் தரையை அடைந்து விடும், இறகு கீழே வர நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்குக் காரணம், பந்து கோழி இறகை விட கனமானது. ஆனால் இதே நிகழ்வு ஜீரோ கிராவிட்டியில் நிகழும்போது இரண்டு பொருட்களுமே தடையின்றி தானே விழுதல் என்ற வினையின் படி, ஒரே உந்துதலில், ஒரே நேரத்தில் தான் தரையைத் தொடும். அதற்குப் பொருட் களின் நிறை மற்றும் எடையானது ஒரு பொருட்டே இல்லை. இதேபோலத்தான் மனிதர்களின் எடையும் விண்வெளியில் ஒருபொருட்டல்ல.
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது பல சவாலான விஷயங்களை சந்திக்கின்றனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளிக்கு செல்பவர்களின் உயரம் பூமியில் உள்ள உயரத்தை விட 5 முதல் 8 சென்டிமீட்டர் வரை கூடுதலாக உயரும். இதனால் மூட்டு, இடுப்பு வலி மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
புவியீர்ப்பு விசை இல்லாதலால் விண்வெளி வீரர்களுக்கு காற்றில் மிதப்பதுபோல் தோன்றும். மேலும் அவர்களின் கை, கால் மற்றும் சில பகுதிகள் உணர்ச்சி குறைந்து காணப்படும். நாம் அன்றாடம் வேலை செய்ய உணவு வேண்டும். ஆனால் பூமியில் சாப்பிடும் உணவுகளை போல் விண்வெளியில் சாப்பிட முடியாது. டூத் பேஸ்ட் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட பிரத்யேக உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும். சரி இதற்கெல்லாம் தயாராகிவிட்டோம். அடுத்து என்ன என்று கேட்டால் சிக்கலான விண்கலனில் பயணம் செய்வதுதான் மிக சவாலானது. பூமியின் வளிமண்டலத்தை அவ்வளவு சீக்கிரம் கடந்து சென்றுவிட முடியாது. அதனால்தான் சாதாரண விமானங்களால் விண்வெளிக்கு செல்ல முடியாது. வளிமண்டலத்தில் இருந்து புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு விண்வெளியை அடைய அதிவேகத்தில் சென்றால்தான் சாத்தியமாகும். அதாவது பூமியில் இருந்து ராக்கெட் செல்ல விடுபடு திசைவேகமானது (எஸ்கேப் வெலாசிட்டி) வினாடிக்கு 11.5 கி.மீ ஆக உள்ளது. ஒரு வினாடி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் சென்றால்தான் விண்வெளிக்குள் நுழைய முடியும். அதாவது மணிக்கு 40 ஆயிரத்து 300 கி.மீ வேகம். மலைப்பாக இருக்கிறதா? ஆம் பூமியில் மனிதர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத வேகம். அதிகபட்சமாக பயணிகள் விமானத்தில் மணிக்கு 800 கி.மீ பயணம் செய்வதே இதுவரை சாதாரண மனிதர்கள் பயணம் செய்துள்ள அதிவேகமாக இருக்கும். விண்வெளி பரப்பில் அதிவேகத்தில் ரோலர் காஸ்டரில் பயணம் செய்வதுபோல சுழற்றி அடித்து விண்வெளிக்குள் நுழைந்தால் அங்கும் சவால்கள் உள்ளன. வெறும் ஆறுமணி நேர பயணத்தில் இலக்கை சோயூஸ் விண்கலன் அடைகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் சாதாரணமாக வீட்டிற்குள் நடமாடுவது போல இருக்க முடியாது. ஒவ்வொரு செயலும் சவாலானது ஆகும். பூமியில் இருக்கும் போது நாம் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். ஆனால் விண்வெளியில் மிதந்து கொண்டு இருக்கும் மையத்தில் கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் விண்ணில் ஈர்ப்பு விசை இல்லாததால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் உடல் பிரச்சினைகள் ஏற்படும். இதை சீராக்க உடற்பயிற்சி முக்கியம். விண்வெளியில் தண்ணீரை பயன்படுத்த முடியாது. எனவே ஈரமான துணிகள் அல்லது தண்ணீரை சொட்டு சொட்டாக சோப்பு திரவத்துடன் கலந்து தங்கள் உடலை தூய்மை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தண்ணீர் மறுசுழற்சியில் தயார் செய்யப்படுகிறது. கேட்டால் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அது உள்ளது. பொதுவாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் மற்றும் வீணாகும் தண்ணீர் தனியாக தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. பிறகு அந்த கழிவு நீரானது மறுசுழற்சி செய்யப்பட்டு கழிவுகள் நீக்கம் செய்யப்பட்டு 75 சதவீதம் தண்ணீராக மாற்றப்படுகிறது. இதற்கு யூரின் ரீசைக்கிளிங் சிஸ்டம் என்று பெயர். இதற்கு தனி தொழில்நுட்பமே உள்ளது ஆச்சரியப்பட வைப்பதாகும்.
விண்வெளியில் இருக்கும்போது இரவு பகல் என எதுவும் கிடையாது. அங்கு பிரதிபலிக்க எந்த பொருளும் இல்லாததால் விண்வெளியானது இருட்டாகவே இருக்கும். முக்கியமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மிதந்து கொண்டு இருக்கும்போது ஒரு நாளில் 16 முறை சூரியன் உதித்து மறைகிறது. இதனால் நேரத்தை கணக்கிட்டு விண்வெளி வீரர்கள் உறங்குகிறார்கள். இதற்கு உறைபோன்ற (Sleep Bag) அமைப்பு உள்ளது. அதன் உள்ளே நுழைந்து படுத்துக்கொள்ள வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நாளையும் விண்ணில் கழிக்க வேண்டியிருக்கும்.
விண்வெளிக்கு செல்ல பயன்படுத்தப்படும் சோயூஸ் விண்கலனை பொருத்தவரை விண் வெளிக்கு சென்ற உடனே ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக விடப்படுகிறது. இந்த விண்கலன் மூன்று பாகங்களை உடையது. அவை ஆர்பிட்டல் மாடியூல், டீசன்ட் மாடியூல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் புரோப்பெல்சன் மாடியூல் என்பதாகும். பூமிக்கு திரும்பும்போது டீசன்ட் மாடியூல் என்ற பகுதியை தவிர மற்ற பகுதிகள் விண்வெளியிலேயே கழட்டி விடப்படுகின்றன. அவை வளிமண்டல மேற்பரப்பில் எரிந்து சாம்பலாகி விடுகிறது. டீசன்ட் மாடியூல் பகுதியில் பாராசூட் உள்ளது. அந்த பகுதியில் அமர்ந்து விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள். அவ்வாறு திரும்புவது சாப்ட் லாண்டிங் (மென்மையான வருகை) எனப்படுகிறது. ஆனால் அதுவும் மென்மையானது அல்ல. கீழே விழும்போது மிகப்பெரிய அதிர்வை விண்வெளி வீரர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் பூமிக்கு திரும்பி வந்து சுவாசிக்கும்போது சுகமாக அவர்கள் உணர்கிறார்கள்.
இனி வரும் காலங்களில் நாமும் சாதாரணமாக விடுமுறைக்கு விண்வெளியில் விசிட் அடித்து விட்டு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.
-மர்யம்.சா