

வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்யா (19). இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. ஆனால் அவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கார்த்திக்கும், சவுந்தர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி இடையகோட்டை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (25). இவரும், உறவினரான கவுரியும் (20) கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே கவுரிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து 2 காதல் ஜோடிகளின் பெற்றோரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் 2 காதல் ஜோடிகளும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.