நாளை 3 மணி நேரம் கடையடைப்பு - டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு அறிவிப்பு

டாஸ்மாக் தொழிற்சங்கங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை 3 மணி நேரம் கடையடைப்பு - டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனும் டாஸ்மாக் நிறுவனத்தை தமிழக அரசே நேரிடையாக கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2003ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அரசே நேரிடையாக பணியாளர்களை தேர்வு செய்து தற்போது சுமார் 25,000 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இத்துறையில் பணியாற்றும் பணியாளர்களை தற்காலிக பணிநிலையில் குறைந்த தொகுப்பூதியத்தில், பணிவிதிகள் ஏதுமின்றி பல்வேறு சமூக சூழ்நிலைகளில் பணி பாதுகாப்பின்றி மனநெருக்கடியில் சமூக பொருளாதார குற்றசெயல்களால் அதிகம் நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.

குறைந்தபட்சம் 480 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்க சட்டங்கள் இருந்தும் இவர்களுக்கு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ்மாக்கில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கடந்த 5 நாட்களாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசின் நிதி ஆதாரத்திற்கு கடுமையாக உழைத்து பாடுபட்டு வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கீழ்கண்ட அத்தியாவசியமான கோரிக்கைகளை பின்னரும் தெரிவிக்கின்றோம்

கோரிக்கைகள்:

1. பணி நிரந்தரம்

2. காலமுறை ஊதியம்

3. ஓய்வூதியம்

மேற்கண்ட கோரிக்கைகளை கடந்த காலங்களில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பிலும் முன்வைத்தோம். அமைச்சரும் தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் பேசி நல்ல தீர்வை பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணிநிரந்தரம் செய்வோம்" என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில் எல்.ஜி. சாலையில் "தொடர் காத்திருப்பு போராட்டம்" நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நேற்று (05.02.2026 அன்று) அமைச்சர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) போராட்ட குழுவின் தலைமைகளை அழைத்து பேசினார். இதில் 16 சங்கங்கள் கலந்து கொண்டன. இதில் கோரிக்கைகள் குறித்து கலந்து பேசி நல்ல முடிவுகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் எழும்பூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 09.02.2026 அன்று(நாளை) டாஸ்மாக் கடைகளை மாநிலம் முழுவதும் 3 மணி நேர கடையடைப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com