

சென்னை,
சென்னை கிண்டியில் நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-
சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும் உள்ளடக்கிய ரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதுதான். தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டமும் இந்த வளர்ச்சியில் விடுபடக்கூடாது, அனைத்து மாவட்டங்களையும் கைப்பிடித்து தூக்கிவிட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மேற்பார்வையில் நடைபெறும் 'நான் முதல்வன்' திட்டம் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். முதன்முதலில் தமிழ்நாட்டில் டைடல் பூங்காக்களை கலைஞர் உருவாக்கினார். தற்போது அதே வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் 7 நியோ டைடல் பூங்காங்களை உருவக்கியுள்ளோம். மேலும் 30 தொழிற்பூங்காக்களையும் உருவக்கியுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் தரவுகளின் படி 29.63 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சமமாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தகவல் தொழில்நுட்பத் துறை வளர வேண்டும் என்றால், நமது படித்த இளைஞர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
எவ்வளவு முதலீடுகள் என்பது முக்கியமில்லை; எப்படி பட்ட வேலைவாய்ப்புகள், எவ்வளவு வேலைவாய்ப்புகள், எங்கே வேலைவாய்ப்புகள், யாருக்கான வேலைவாய்ப்புகள் என்பதே முக்கியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். எனவே அதனை நோக்கிதான் நாங்கள் பயணித்தோம்.
திராவிட மாடல் 2.0-ல் தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுக்கு ஏற்ப தரமான வேலைவாய்ப்பை அதிகப்படுத்த உள்ளோம். ஷிப் பில்டிங், லைப் சைன்ஸ், ஏ.ஐ. டீப் டெக்னாலஜி, செமி கண்டக்டர்ஸ், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.