

நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் குமரவேல். இவருக்கும், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த சக்திபிரியா (29 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குமரவேல் குடும்பத்தினருக்கும், சக்திபிரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக திருத்துறைப்பூண்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் சக்திபிரியா வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சக்திபிரியாவை உறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவர் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். சக்திபிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 28-ந்தேதி மன்னார்குடியில் வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கணவர் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கணவரது குடும்பத்தினருக்கும், சக்திபிரியாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த சக்தி பிரியா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திபிரியாவின் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சக்திபிரியாவின் பெற்றோர், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 7 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.