‘தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது’ - திவ்யா சத்யராஜ்


‘தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது’ - திவ்யா சத்யராஜ்
x
தினத்தந்தி 2 Oct 2025 11:55 AM IST (Updated: 2 Oct 2025 1:40 PM IST)
t-max-icont-min-icon

தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்தான் உண்மையான தலைவர் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது என நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

“ஒரு அரசியல்வாதியாக இன்று நான் பேச வரவில்லை, ஒரு ஊட்டச்சத்து நிபுணராக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கரூரில் கூடிய கூட்டத்தைப் போல் நீங்கள் ஏதேனும் ஒரு கூட்டத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால், உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறையலாம். உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் வரலாம். சர்க்கரை அளவு குறையாமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு சாக்லேட் அல்லது இனிப்பை கையில் வைத்துக் கொள்வது நல்லது.

நீர் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, தோளில் தொங்கவிடக்கூடிய வாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்றால், இது போன்ற பாட்டில்களை கொண்டு செல்வது எளிமையாக இருக்கும். அதோடு ஓ.ஆர்.எஸ். கரைசல் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது தவிர வெல்லத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம், அல்லது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து கொஞ்சம், கொஞ்சமாக குடித்தால் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

த.வெ.க. தலைவர் விஜய்யின் பாதுகாவலர்கள், அக்கட்சியின் தொண்டர் ஒருவரை தூக்கி வீசுவது போன்ற வீடியோவை பார்த்தேன். அந்த பையனுக்கு முதுகுத்தண்டு அல்லது தலையில் காயம் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவர் கோமா நிலைக்கு சென்றிருந்தாலோ அவரது வாழ்க்கையே தொலைந்து போயிருக்கும்.

தொண்டர்களைப் பார்த்து பயப்படாதீர்கள். தொண்டர்களை தூக்கி வீசாதீர்கள். தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது. தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்தான் உண்மையான தலைவர். மக்களை ஆள வேண்டும் என்று நினைப்பவர் உண்மையான தலைவர் கிடையாது, மக்களுக்காக பல வருடங்களாக வாழ்பவரே உண்மையான தலைவர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story