"எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்.." - நயினார் நாகேந்திரன்

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், திருப்பரங்குன்றம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ரெய்டை கொடுத்து அ.தி.மு.க.வை பா.ஜ.க. கூட்டணிக்கு வரவழைக்க முயற்சி நடக்கிறதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்; ரைடு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வினர் தொடர்புடைய வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. தி.மு.க.வினர் வீட்டிலும் நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும். நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.