மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி - நாளை துவக்கி வைக்கிறார் உதயநிதி

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்த விற்பனைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலில், சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் விற்பனைக் கண்காட்சிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் வாயிலாக இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக, தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை 18.12.2025 அன்று சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கி வைக்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






