

ஆற்காட்டான்குடிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டக்கூடாது என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 320 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கூட்டத்தில், கணியம்பாடியை அடுத்த ஆற்காட்டான்குடிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சாரதிவர்மன் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், ஆற்காட்டான்குடிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 67 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஏற்கனவே 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஒரே வகுப்பறையில் 8 வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் சத்துணவு சமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என்று ஆட்சேபனை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டினால் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சத்துணவு சமையலறை கட்ட இயலாது. எனவே அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்கு குடிநீர் தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வீட்டுமனை பட்டா
கே.வி.குப்பம் தாலுகா வடவிரிஞ்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக 40 குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் நாங்கள் வசிக்கும் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. எங்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டுவதற்கு வசதியில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பம் பயிற்சி ஆசான்கள் மற்றும் சங்கம் சார்பில் அளித்த மனுவில், வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 19 மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்றது. இதில், போட்டி விதிகளை மீறி ஒருதலை பட்சமாக குறிப்பிட்ட பள்ளியின் மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அனுபவம் இல்லாத சென்னையை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் போட்டியின் நடுவர்களாக பணிபுரிந்தனர். இனிவரும் காலத்தில் திறமையான நடுவர்களை கொண்டு உரிய முறையில் போட்டி நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
வேலூர் வேலப்பாடியை சேர்ந்த ஐடா ஸ்கட்டர் பள்ளி பிளஸ்-1 மாணவன் ஸ்ரீதர்ஷன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற வெள்ளி, வெண்கல பதக்கங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றான்.