கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கெஞ்சுவதா? - அன்புமணி

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி வரும் சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில், அதற்காக ஊருக்கு செல்ல முடியாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நாள்களில் சென்னையிலிருந்து கோவை செல்ல ரூ.5,000-மும், சேலத்திற்கு ரூ.4,110-ம் தனியார் ஆம்னி பஸ்கள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன.
அதேபோல், தீப ஒளி திருநாள் முடிவடைந்து வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை திரும்புவதற்கும் கிட்டத்தட்ட்ட இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ஆறு முதல் 10 மடங்கு வரை அதிகம் ஆகும். ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு.
ஆனால், அந்தக் கடமையையும், அதிகாரத்தையும் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் திமுக அரசு பயன்படுத்தி வருகிறதே தவிர, ஒருமுறை கூட முழுமையாக, கட்டணக் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் பயன்படுத்தியதில்லை. ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது குற்றம். கட்டணக் குறைப்பு குறித்து ஆம்னி பஸ் நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவது போன்ற செயல்களில் தான் அரசு ஈடுபடுகிறது. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல் அரசு கெஞ்சுவது ஏன்?.
அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்தால் சிரிப்பு தான் வரும். சட்டத்தை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? இவற்றைப் பார்க்கும் போது ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது அப்பட்டமாகத் தெரியும்.
ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களுக்கான கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்; அதையும் மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






