பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் கொண்டு வர தடை

பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி,
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் பறவை காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதால், தமிழகத்தில் பரவாமல் இருக்க கேரளாவையொட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கேரள மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கால்நடைத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:-
பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின் எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் நீலகிரிக்கு கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. கேரள எல்லையோரம் உள்ள 7 சோதனை சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோரம் உள்ள ஒரு சோதனை சாவடி ஆகிய 8 இடங்களில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. நோய் தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்த நோய் நீலகிரி மாவட்டத்திலும் பரவ வாய்ப்பு உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழி, வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






