பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு


பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு
x

காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் எச்-1, என்-1 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உடனடி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே கால்நடைதுறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story