பா.ஜனதாவுடன் கைகோர்த்த பா.ம.க. : பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

நாளை சேலத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜனதாவுடன் கைகோர்த்த பா.ம.க. : பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்
Published on

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷே) பங்கேற்றார். அவருக்கு சாலையின் இருபுறத்திலும் நின்ற கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு காலை 11.40 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு வருகிறார்.

அங்கு மதியம் 1 மணிக்கு நடக்கும் சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதனிடையே, சேலத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?, வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நாளை சேலத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com