சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக் குழுவால் 'சிறந்த திறன்கொண்ட பல்கலைக்கழகம்' என்ற அந்தஸ்தை பெற்றதோடு, ஐந்து நட்சத்திர தகுதியையும் சென்னைப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வகித்த டாக்டர் S. இராதாகிருஷ்ணன், V.V. கிரி, . R. வெங்கட்ராமன், டாக்டர் APJ அப்துல் கலாம். நோபல் பரிசு பெற்ற சர். CV. இராமன், டாக்டர் S. சந்திரசேகர் ஆகியோரை இந்த நாட்டிற்கு அளித்த பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தை சீரழித்த பெருமை தி.மு.க. அரசையே சாரும்.
தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்தே உதவிப் பேராசிரியர்கள் நியமனம். பணியாளர்கள் நியமனம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதோடு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான நிதியை தி.மு.க. அரசு முறையாக கொடுக்கவில்லை. இதன் காரணமாக, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவதிலும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது தவிர, தொலை தூரக் கல்வி பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகளை குறித்த கால அளவிற்குள் முடிக்க இயலாத சூழ்நிலை நிலவுகிறது. இதனைக் கண்டித்து, நானும் அறிக்கைகள் விடுத்திருந்தேன். இருப்பினும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதியை சீர் செய்ய தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளதாகவும், இந்தக் கூட்ட கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த முடிவு எடுக்கப்படும். பட்சத்தில் அவர்களுடைய மாத கஊதியம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து முப்பதாயிரம் ரூபாய் வரை குறைக்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முதலில் பாரத ரிசர்வ் வங்கிக்கு இணையான ஊதியத்தை பெற்று வந்ததாகவும், தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வருவதாகவும், இந்த ஊதிய விகிதம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது இந்த ஊதிய விகிதத்தையும் குறைக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னைப் பல்கலைக்கழக பணியாளர் சங்கம் 35 சென்னைப் தெரிவிக்கிறது. எனவே, பணியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை கைவிடவில்லையெனில் நானை முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருக்கின்ற ஊதியத்தை குறைப்பது என்பது தொழிலாளர் விரோதக் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே தொழிலாளர் விரோதக் கொள்கையில் ஈடுபடுவது என்பது நியாயமற்றது. தி.மு.க. அரசின் பணியாளர் விரோதக் கொள்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கே இந்த நிலைமை என்றால், மற்ற பல்கலைக்கழகங்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நிதி நெருக்கடியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் வகையில், பல்கலைக்கழகத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், பல்கலைக்கழகத்திற்கு உரிய மானியத்தை உரிய நேரத்தில் வழங்கவும், அங்கு நடைபெறும் முறைகேடுகளை களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்; அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






