எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி; அதிமுக தலைமை அறிவிப்பு

அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பெருவிழா நாளை மறுதினம் ( 18.12.2025 - வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ லைட் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. ஜெயலலிதா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.
ஜெயலலிதாவை தொடர்ந்து அதிமுக சார்பில், பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற 18.12.2025 வியாழக் கிழமை மாலை 4.30 மணியளவில், சென்னை, கீழ்பாக்கம், CSI லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்களும், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






