10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். ராமன்புதூர் பகுதியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தனது நண்பரான யோகா மாஸ்டர் உதவியுடன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பகுதி நேரமாக டேக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறார். இது தவிர டேக்வாண்டோ போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை வெளியூர்களுக்கு அழைத்து செல்வதும் வழக்கமாம்.
அதன்படி கடந்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் மதுரையில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் அமைப்பு நடத்திய டேக்வாண்டோ போட்டிக்கு கன்னியாகுமரியில் இருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார். அப்போது பெற்றோருடன் வந்த மாணவிகளை அனுப்பிய பிரதீப், தனியாக வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை மட்டும், மதியம் மற்றொரு டேக்வாண்டோ மேட்ச் இருப்பதாக கூறி தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தாக தெரிகிறது. பின்னர் மாணவியுடன் கன்னியாகுமரிக்கு திரும்பினார். மதுரையில் இருந்து வந்த பின்னர் மாணவி சரியாக சாப்பிடாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி மாணவி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அறிந்த பிரதீப் பயத்தில் தற்கொலைக்கு முயன்று, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.






