கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இருமல் சிரப்பை உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்ததாக தெரியவந்து உள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தெரியவந்தந்து. இதனையடுத்து கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை ம.பி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோல்ட்ரிப் மருந்து குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழக அரசு தான் முதலில் கோல்ட்ரிப் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததை கண்டுபிடித்தது. மத்திய பிரதேசமும் மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் ஓரிரு நாட்களில் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தில் முறையாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்திற்கு ரூ.621 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், ஜனவரியில் திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






