கடலூர் ரசாயனக் கசிவு விபத்து - பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வில் அலட்சியமா? - முத்தரசன் கேள்வி


கடலூர்  ரசாயனக் கசிவு விபத்து - பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வில் அலட்சியமா? - முத்தரசன் கேள்வி
x

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம் 04.09.2025 ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்பதை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் கால முறைப்படியும், திடீர் புலத்தணிக்கையும் முறையாக மேற்கொண்டால், இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும். ஆனால் அது முறையாக நடைபெறுவதில்லை என்பதே விபத்துக்கு முக்கிய காரணமாகும்.

இந்த விபத்தில், இதுவரை உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும், உடனடியாக உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.

ஆலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டிய ஆலை நிர்வாகத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story