தினத்தந்தி செய்தி எதிரொலி: கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் இருந்து க.மாமனந்தல் செல்லும் சாலையில் உள்ள அன்னை நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடந்ததாலும், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டதாலும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமமடைந்து வந்தனர்.
இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பிரசாந்த், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் மூலம் கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.