4-வது நாளாக குளறுபடி: சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து


4-வது நாளாக குளறுபடி: சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து
x

கோப்புப்படம்

நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும். மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமான நிலையங்களுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவங்களை அடுத்து விமான ரத்து மற்றும் தாமதங்களை குறைக்க உரிய செயல்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கேட்டுக்கொண்டது. இதுகுறித்து இந்திய விமானிகள் கூட்டமைப்பு இண்டிகோ விமான நிறுவன நிர்வாகத்தை குறை கூறியிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 4-ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் சுமார் 550 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

விமானங்களை இயக்குவதற்கு, விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானங்கள் ரத்து பற்றி எந்த தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று (டிச.5) இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச. 5) நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானங்கள் ரத்தால் பயணிகள் கடுமையாக தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு, ஆட்கள் பற்றாக்குறை, திட்டமிடலில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story