எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு... செங்கோட்டையன் மிரட்டல்

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா என்று செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவருக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே வருகிற 5-ந் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என செங்கோட்டையன் கூறினார்.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அதன்படி, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.
ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்தே இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லாம எங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார்.
அதிமுகவை ஒன்றிணைக்க நான், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் பொதுச்செயலாளரை சந்தித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கும் மனநிலையில் இல்லை வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். என்னைப்போல் மனநிலை உள்ளவர்களின் கோரிக்கையும் இதுதான். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாம் நிறைவேற்ற வேண்டும். "மறப்போம், மன்னிப்போம்” என்று கூறினார்.






