பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக்கெடுக்கும் பணி

கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் குப்புசாமி ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக்கெடுக்கும் பணி
Published on

கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் குப்புசாமி ஆய்வு செய்தார்.

அதிகாரி ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வீரப்பநகரில் நேற்று மாவட்ட புள்ளியியல் துறை சார்பில், பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது. இந்த பணிகளை புள்ளியியல் ஆய்வாளர்கள் கிருத்திகா, பார்த்திபன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் குப்புசாமி ஆய்வுசெய்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றத்தின் கீழ் மக்களின் வாழ்க்கை தரம், வறுமை ஒழிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற அம்சங்களில் நிகழும் மாற்றங்களை கண்டறிந்து, அரசின் திட்டமிடலுக்கு துணை செய்யும் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வு தமிழகத்தில் புள்ளியியல் துறை மற்றும் எம்.ஐ.டி.எஸ். எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

ஒத்துழைப்பு

தமிழகத்தில் நகர்புறம், கிராமபுறங்களில் 20,539 வீடுகள் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 12,632 வீடுகளில் ஆய்வு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 7,907 வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், நகர்புறத்தில் 95, கிராமபுறத்தில் 126 வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளில் மக்களின் குடும்ப சூழ்நிலை, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் பிற அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆய்விற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com