சம வேலைக்கு சம ஊதியம்; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம்; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்  - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.

தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com