ஈரோடு: பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபர்கள் கைது

திருடப்பட்ட நகை எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தே.மு.தி.க. கட்சியின் வட்ட செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயசித்தாராணி (வயது 40). இவர் ஈரோடு ஆசிரியர் காலனி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 22-ந்தேதி இரவில் ஜெயசித்தாராணி, ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.
சென்னிமலை ரோட்டில் டீசல் செட் பகுதியை கடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவர், ஜெயசித்தாராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஜெயசித்தாராணி இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சமத்துவபுரம் பிள்ளையார்பட்டி தெருவை சேர்ந்த அருண்குமார் (28), விருதுநகர் மாவட்டம் காரியபட்டி அருகே உள்ள முடுக்கன்குளத்தை சேர்ந்த திருமுருகன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட அருண்குமாரை திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும், திருமுருகனை விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, திருடப்பட்ட நகை எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






