கோவில்களின் பெயரில் போலி இணையதளம்; தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் கைது


கோவில்களின் பெயரில் போலி இணையதளம்; தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் கைது
x

பக்தர்களுக்கு பிரசாதம், சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் வசூலித்து உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் சிருங்கேரி பகுதியில் உள்ள சாரதா மடம், ஒரநாடு அன்னபூர்ணேஷ்வரி கோவில் உள்பட பல கோவில்களின் பெயரில் சிலர் போலி இணையதளங்களை தொடங்கி, அதில் பக்தர்களுக்கு பிரசாதம், சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் வசூலித்து உள்ளனர். அதாவது www.devaseva.com என்ற பெயரில் ஒரு போலி வலைத்தளத்தை தொடங்கி, அதன் மூலம் சிக்கமகளூரு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிரபல கோவில்களில் பிரசாதம், சிறப்பு பூஜை, பிற சேவைகள் செய்யலாம் என கூறியுள்ளனர்.

அதன்பேரில் பலரும் இந்த இணையதள முகவரியை தொடர்பு கொண்டு பிரசாதம், பூஜை, சேவை பெற பணம் கட்டியுள்ளனர். அவ்வாறு பணம் கட்டிய பக்தர்களுக்கு அவர்கள் எந்த சேவையும் வழங்காமல் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி ஒரநாடு அன்னபூர்ணேஷ்வரி கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கோவிலின் துணை மேலாளர் ராகவேந்திரா இதுபற்றி கலசா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் ஆம்தே இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் இந்த மோசடி கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த நிலையில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் மோசடி செய்ததாக 2 பேரை கலசா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் சுதீப், அனில்குமார் என்பதும், இவர்கள் 2 பேரும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

1 More update

Next Story