கள்ளக்காதலால் விபரீதம்: முருங்கை இலை ‘சூப்’பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்

குமார் , விஜயா , பாலு
வயிற்றுவலி ஏற்படும்போது, முருங்கை இலை ‘சூப்’ குடிக்கும் பழக்கம் அந்த நபருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் உள்ள சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர் விவசாய வேலையுடன், பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும் பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா (36). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகனும், விவசாயியுமான பாலு (35) என்பவருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.
தொழில்ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியது. இதையடுத்து பாலு அவ்வப்போது குமாரின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது குமாரின் மனைவி விஜயாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி குமாருக்கு அரசல் புரசலாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமார் திடீரென இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையே குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விஜயா, பாலு ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது:-
விவசாய வேலை தொடர்பாக குமாருக்கு ரூ.15 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமை காரணமாக அவ்வப்போது குமார், விஜயாவை அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்ததோடு, கடனை தான் அடைக்க முடியாது, நீயே அடைத்துக்கொள் என்று கூறி திட்டியும் உள்ளார். இதையடுத்து குமாரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் பாலுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று விஜயா முடிவு செய்துள்ளார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் விஜயா தினமும் 2 தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்துள்ளார்.
குமாருக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்படும்போது, முருங்கை இலை ‘சூப்’ குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஜயாவும், பாலுவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் குமார் நேற்று முன்தினம் வயிற்று வலியால் துடித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட விஜயா, சுமார் 20 தூக்க மாத்திரைகளை முருங்கை இலை ‘சூப்’பில் கலந்து குமாரிடம் கொடுத்துள்ளார். அதனை குமார் குடித்தார்.
சிறிது நேரம் கழித்து குமார் இறந்து விட்டாரா? என விஜயா சோதித்து பார்த்துள்ளார். ஆனால் குமார் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த பாலுவை அழைத்து, குமார் இன்னும் சாகவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலு, குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல 2 பேரும் அங்கிருந்து பூப்பறிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த விஜயா, குமார் பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி, அலறி துடிப்பது போல் நடித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் வந்து பார்த்தபோது வயிறு வலிப்பதாக கூறிய குமார், உயிரிழந்து கிடந்ததாக நாடகம் ஆடியுள்ளார். உறவினர்களும் குமாரின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்துள்ளனர்.
அப்போது குமாரின் சாவில் சந்தேகம் கொண்ட அவருடைய உறவினர் ஒருவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையிலேயே குமார் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்டு, தாய் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் மகன்களும், மகளும் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






