பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி - 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு


பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி - 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
x

சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அண்ணா சாலை முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய இணைய சேவையும் முடங்கியுள்ளது.

மேலும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர் அறையில் உள்ள கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story