தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக.. கியூ.ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் இன்னொரு அணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண இருக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதால், முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டிவருகிறது. "தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தருவோம்" என்று அக்கட்சி கூறிவந்தாலும், இன்னும் கூட்டணி கணக்கு தொடங்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக தவெக நிர்வாகிகளுக்கு கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பொறுப்பாளர்களுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களிடம் சென்றமாதம் வழங்கி இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று, இரண்டாம் கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1921 நகர/மத்திய/ பேரூர் கழகங்கள் மற்றும் அதை சார்ந்த 21 ஆயிரத்து 150 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1,00,231 பேருக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களிடம் இன்று வழங்கினார்.
மொத்தமாக இதுவரைக்கும் 2,02,334 பொறுப்பாளர்களுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






