

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி – தாம்பரம் வளாகம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தினை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தாம்பரம் பகுதியில் ஒரு மருத்துவக் கட்டமைப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை என்பது கோவிட் பேரிடர் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கு (Isolation ward) என்கின்ற வகையில் கட்டப்பட்டது. தற்போது கோவிட் என்னும் பேரிடர் நம்மை விட்டு நீங்கியிருக்கும் நிலையில், இக்கட்டிடம் பயன்படுத்திட வேண்டும் என்கின்ற வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இம்மருத்துவக் கட்டமைப்பு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை 180 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 400 பேர் வரை புற்றுநோய் மருத்துவ பயனாளர்கள் மருத்துவ வசதி பெறுவதற்கு ஏற்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, 16 படுக்கை வசதிகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு, 134 பொதுப்படுக்கை பிரிவு, 30 கட்டணப் படுக்கை (pay wards) என ஒட்டுமொத்தமாக 180 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை பெறும் அளவில் மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு தேவைப்படும் ஆதரவு சிகிச்சை, தமிழ்நாடு அரசு சார்பில் புற்றுநோய் நல்லாதரவு மையம் என்கின்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் ஓரிரு இடங்களில் இந்த கட்டமைப்பு இருக்கின்றது. இந்தியாவில் வேறு எந்த மாநில அரசு நிர்வாகத்திலும் ஏன் மத்திய அரசு மருத்துவ நிர்வாகத்திலும் கூட இது போன்ற கட்டமைப்பு இல்லை. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, புற்றுநோய் நல்லாதரவு மையம் என்கின்ற இந்த அமைப்பு, இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களை இறுதி நிலையில் அவர்களுக்கு கவனிப்பு, மகிழ்ச்சி மனநிலை உருவாக்குவதற்கு மருத்துவம் மற்றும் கவுன்சிலிங் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளது. அரசு மருத்துவர்கள் அருகில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களும் நாங்களும் இணைந்து இச்சேவையில் ஈடுபடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களையும் பயன்படுத்தி இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு அவர்களுடைய இறுதி கட்ட தணிப்பு சிகிச்சை, வலி நிவாரணம், அறிகுறி மேலாண்மை,
உளவியல் சமூக ஆதரவை இந்த அரசு அளிக்கும் நோக்கில் ரூ.30.16 கோடி செலவில் இந்த மருத்துவமனை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. முதல்-அமைச்சர் இந்த மருத்துவக் கட்டமைப்பை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு ஆண்டொன்றிற்கு ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு செலவினத்திற்காக தந்திருக்கிறார்கள்.
தாம்பரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து இன்றைக்கு அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை தினந்தோறும் 2,500 புற மருத்துவ பயனாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். உள் மருத்துவ பயனாளர்கள் 250 பேர் வரை பயன்பெற்று வருகிறார்கள். தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 1,800 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 1,200 பிரசவங்கள் இம்மருத்துவமனையில் நடந்துள்ளது. அந்த மருத்துவமனையையொட்டி, இந்த புற்றுநோய் நல்லாதரவு மையம் அமைந்திருப்பது என்பது சிறப்பு.
இதன் அருகில் தான் தேசிய சித்த மருத்துவமனை அமைந்திருக்கிறது. இதன் அருகில் மாநில அரசின் காசநோய் மருத்துவமனை இருக்கின்றது. பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் ஒரே இடத்தில் தாம்பரம் பகுதியில் அமைந்திருப்பது என்பது வரலாற்று சிறப்பு. அந்தவகையில் இன்றைக்கு புற்றுநோயின் இறுதி கட்டத்தில் இருக்கின்ற பாதிப்புக்குள்ளானவர்களை மகிழ்விக்கின்ற ஒரு மையமாக இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மதிப்பிற்குரிய துணை மேயர் ஜி.காமராஜ், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராமன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.