"தூரமாக நின்று கைக்கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால்.." ரஜினியிடம் தங்க சங்கிலி பரிசு பெற்ற பத்மா நெகிழ்ச்சி

சென்னையில் தூய்மை பணியின்போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
"தூரமாக நின்று கைக்கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால்.." ரஜினியிடம் தங்க சங்கிலி பரிசு பெற்ற பத்மா நெகிழ்ச்சி
Published on

சென்னையில் தூய்மை பணியின்போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற பெண் தூய்மை பணியாளர் பத்மாவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது, தங்கச் சங்கிலி ஒன்றையும் பத்மாவின் கழுத்தில் அணிவித்து நடிகர் ரஜினிகாந்த் நெகிழச் செய்தார்.

குடும்பத்தினருடன் ரஜினிகாந்தை சந்தித்துவிட்டு, பூரிப்புடன் வெளியே வந்த பத்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னிடம் போன் கிடையாது. என்னுடைய கணவர் மட்டும்தான் போன் வைத்திருக்கிறார். ரஜினி சார் கூப்பிடுவதாக நேற்று எனது கணவரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.

நான் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்த உடனேயே, 'தலைவர் உன்னைய பார்த்து பாராட்டணும்னு சொல்றாராம். நாளைக்கு போறோம்' என்று எனது கணவர் உற்சாகமாக கூறினார். அவர் சொன்ன உடனேயே பயங்கர சந்தோஷமாகிவிட்டது. இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. நான் படிக்காதவள். அவரை (ரஜினிகாந்த்) பார்த்து எப்படி கௌரவமா பேசுறது என்று ஒரே குழப்பமாக இருந்தது. இன்றைக்கு காலையில் குடும்பத்தோட கிளம்பி போயஸ்கார்டன் சென்றோம்.

சும்மா பாராட்டுவார், தூரமாக நின்னு கைக்கொடுப்பார் என்று நினைச்சேன். ஆனா, போன உடனேயே என்னையை அரவணைச்சு தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். அதிலேயே நெகிழ்ந்து போய்விட்டேன். 'நீங்க செஞ்சது ஒரு சேவை. எல்லாரும் உங்களை மாதிரியே நல்ல மனசோட இருக்கணும். இந்தப் புண்ணியம் எல்லாம் உங்க பேரப் புள்ளைங்களுக்கு பெரிய சந்தோஷமா திரும்ப கிடைக்கும்' என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார்.

2 பேத்திகளையும் கட்டிப்பிடிச்சு, கொஞ்சி போட்டோ எடுத்துக்கிட்டார். என் வீட்டுக்காரரும், அவருடைய அண்ணனும் ரஜினி சாரோட தீவிர ரசிகர்கள். அவர்களிடமும் அமர்ந்து பேசினார். 'நீங்கெல்லாம் முன்னுதாரணமானவங்கன்னு சொல்லி ஒரு செயினையும் பரிசாக கொடுத்தார். அவரோட எவ்வளவோ படங்களை பார்த்து ரசிச்சிருக்கோம். அவரே கூப்பிட்டு பாராட்டுவாருன்னு நினைத்தே பார்க்கவில்லை. அது நடந்ததுல ரொம்ப சந்தோஷம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com